பட்டுக்கோட்டை - ஒரு முன்னோட்டம்
பட்டுக்கோட்டை வாழ்ந்த, பாடல்கள் எழுதிய காலத்தைப் பற்றிய சில குறிப்புகளையும், மதிப்பீடுகளையும் நம் மனத்தில் இருத்திக்கொள்வது பட்டுக்கோட்டையின் பாடல்களைப் புரிந்து கொள்ள மிகவும் உதவும். "எந்தக் கவிஞனும் சமூகத் தாக்களிலிருந்து விடுபட்டு நிற்க முடியாது." அதுவும் மக்கள் கவிஞர் என்ற பட்டத்திற்கு இயல்பாகவே தகுதியான பட்டுக்கோட்டை, சமூகத்திலிருந்து அன்னியமாகி நின்றிருக்க முடியாது. ஆகவே அவன் தன் காலத்தின் தாக்கங்களை எவ்வாறு உள்வாங்கிக் கொண்டான் என்பதையும், எத்தகைய தாக்கங்கள் அப்போது நிலவின என்பதையும் பார்க்க வேண்டும்.
இந்தியா சுதந்திரமடைந்து சில ஆண்டுகளே ஆகியிருந்த காலத்தில், பாடல்கள் புனைய ஆரம்பித்தவர் கவிஞர் பட்டுக்கோட்டை. இந்தியா சுதந்திரமடைந்தபோது, நாட்டின் பொருளாதாரம் மிக நலிந்த நிலையில் இருந்தது. சொல்லப் போனால் அதற்கு முன்னரே நிலைமை மோசமாகி இருந்தது. இரண்டாம் உலகப் போர் பொருளாதாரத்தை மிகவும் பாதித்தது. அத்தியாவசியப் பொருட்கள் தட்டுப்பாட்டில் இருந்தன். அதன் விளைவாய்ப் பதுக்கலும், கள்ளச் சந்தையும் அதிகரித்தன. உணவுப் பொருள்களில் கலப்படம் அதிகமாகியது. சற்று வசதியாக வாழ்ந்தவர்கள் கூட வீழ்ச்சியுற்றனர். பர்மா போன்ற நாடுகளில் சேகர்த்த செல்வங்களை இழந்து பல்லாயிரக்கணக்கான் தமிழர்கள் அகதிகளாக வந்து சேர்ந்தனர். சென்னை போன்ற நகரங்களில் ஜப்பான்காரன் குண்டு போடுவான் என்று பயந்து, வந்த விலைக்கு வீட்டை விற்றுவிட்டுக் கிராமங்களுக்கு ஓடியவர்கள் உண்டு. சுதந்திர வேள்வியில் தங்கள் சொத்துக்களை இழந்தவர்களும் உண்டு. அன்றைய மதிப்பீட்டின்படி விலைவாசி உயர்ந்து கொண்டிருந்தது. விவசாய உற்பத்தியில்
நவீன முறைகள் அதிகம் அறிமுகமாகாத காலம். அதனால் உற்பத்தியும் அதிகம் இல்லை. பணப்புழக்கம் குறைவாக இருந்த சமூக நிலை.
ஒரு புறம் பற்றாக்குறை! மற்றொருபுறம் பதுக்கல்! ஒரு புறம் சராசரி வாழ்க்கையே சோதனைக்கு உள்ளானது. மறுபுறம் பதுக்கல்காரர்கள் பணக்காரர்கள் ஆகினர். அதே கள்ளுக் கடை சில பேரைக் கனவானாக்கியது. வெள்ளையன் ஆட்சியில் பணிந்து வாழ்ந்து சுகம் கண்ட ஜரிகைக் குல்லாக்கள், அவசர அவசரமாகக் கதர்க் குல்லாக்களை அணிய ஆரம்பித்தன.
இநதச் சூழ்நிலையில் இந்தியா சுதந்திரமடைந்தது. தமிழ்நாட்டின் கள்ளுக் கடை போனது. ஆனால் பற்றாக்குறையும், பதுக்கலும் தொடர் கதை ஆனது. அரிசிக்கே தட்டுப்பாடு! கோதுமையின் வரவு முகுந்தது. இட்லியும், தோசையும் கோலோச்சிய இடத்தில் சப்பாத்தி, பூரி, பரோட்டா அறிமுகமாயின. தொழில் வளர்ச்சி மந்தமாகவும், நிலப் பிரபுத்துவம் இறுக்கமாகவும் இருந்தன. சுருக்கமாகச் சொன்னால் நலிவுற்ற நிலையில் நாட்டின் பொருளாதாரம்! எங்கும் வறுமையின் கோரத்தாண்டவம்.
தமிழ்நாட்டில் காங்கிரஸ்கட்சி பலம் குன்றிய நிலையில் இருந்தது. முதல் அமைச்சர்களைக்கூட அடிக்கடி மாற்றவேண்டியிருந்தது. 1952இல் நடைப்பெற்ற பொதுத் தேர்தலில் மந்திரி சபை அமைக்கவே அதனால் முடியாத நிலை. கடசித் தாவலை ஊக்குவித்து ராஜாஜி மந்திரி சபை அமைத்து முதல்வரானார். அப்போது ஆந்திரம் பிரியவில்லை. காங்கிரஸில் காமராஜர், ராஜாஜி உட்கட்சிப் பூசல் மிகுந்திருந்தத நேரம். ராஜாஜியின் கல்வித் திட்டத்திற்குப் பெரும் எதிர்ப்பு ஏற்பட்டு, அது காங்கிரசிலேயே எதிரொலித்தது. பதவிக்கு வந்த இரண்டு ஆண்டுகளில் ராஜாஜியின் பதவி போயிற்று. காமராஜர் முதல்வரானார்.
திராவிட இயக்கம் வேகமாக வளர்ந்துகொண்டிருந்தது. திராவிடர் கழகத்திலிருந்து 1949-இல் தி.மு.க. பிரிந்து திராவிட இயக்கத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச்சென்றது. தி.மு.க. தலைவர்கள் திரை உலகில் பிரவேசித்தார்கள். அவர்களுக்கு விளம்பரம் கிடைத்தது. இளைஞசர்கள் மத்தியில் திராவி இயக்கம் வேகமாக வறரத் தொடங்கியது.
தமிழ் உணர்வு மேலோங்கத் தொடங்கியது. ஆனால் தி.மு.க. கூட அப்போது தேர்தலில் ஈடுபடவில்லை. 1957இல்தான் முதன் முதலில் தேர்தலில் நேரடியாக ஈடுபட்டது. அதுவரை சமூக சீர்திருத்தப் பகுத்தறிவு வாதம் பேசும் தமிழ் இயக்கமாகவே இருந்தது. வடக்கு வளர்கிறது; தெற்கு தேய்கிறது என்று பேசப்பட்ட காலம். திராவிட நாடு கோரிக்கை உயிரோடிருந்த காலம். " ஏன் வேண்டும் இன்பத்திராவிடம் " என்று முரசொலியில் மாறன் ஒரு நூல் கூட எழுதினார்.
பொது உடைமை இயக்கம் பல சோதனைகளைத் தாண்டி வந்து கொண்டிருந்த காலம் அது! கட்சிக்குத் தடை; தலைமறைவு வாழ்க்கை; சிறைச்சாலை. இவைகளின் இன்னல்களை எல்லாம் சமாளித்து மாநிலத்தின் பிரதான் எதிர்க்கட்சியாக உருவெடுத்தது. 1952இல் பொதுத்தேர்தலில் தலைமறைவாக இருந்த தலைவர்களும், சிறையில் இருந்த தலைவர்களும் வெற்றிபெற்றார்கள். இயக்கம் பிளவு படாத காலம். ஆனால் மெல்ல மெல்லப் பிளவின் விதைகள் இயக்கத்தில் விழுந்த காலம்.
இந்த காலகட்டங்களில்தான் பட்டுக்கோட்டை தன் பயணத்தைத் தொடங்கினார்.
பட்டுக்கோட்டையைப் பற்றி எழுதியவர்களில் பலரும் அவர் சென்னைக்கு வந்து வாழ்ந்ததைப் பற்றியும், திரைப்படங்களில் பாடல் எழுதியதைப் பற்றியும் பொதுவுடைமை இயக்கத்தில் தொடர்பு கொண்டிருந்ததைப் பற்றியும் எழுதி இருக்கிறார்கள். அதற்கு முந்திய காலகட்டத்தைப் பற்றிய தகவல்கள் குறைவு. கலைமாமணி தில்ரூபா சண்முகம் எழுதிய ' பண்பாளர் பட்டுக்கோட்டையார் ' என்ற நூலில் சில தகவல்களைத் தெரிந்துகொள்ள முடிகிறது. சில மலர்களில் வெளிவந்த கட்டுரைகளிலிருந்தும் சில செய்திகளை தெரிந்து கொள்ள முடிகிறது. ஜீவபாரதி பல தகவல்களை கொடுத்துள்ளார்.
பட்டுக்கோட்டை, சின்ன வயதிலியே பல தொழில்களில் அனுபவம் பெற்று, கடைசியில் திரைப்பாடலாசிரியராக வெளிச்சத்திற்கு வருவதற்கு முன், பல நாடக சபாக்களில் இருந்திருக்கிறார். நடித்திருக்கிறார், பாடல்கள் எழுதி இருக்கிறார். சக்தி நாடக சபா, சிவாஜி நாடக மன்றம், ஓ.ஏ.கே. தேவர் நாடகக் குழு முதலியவற்றில் பட்டுக்கோட்டை பணியாற்றியிருக்கிறார். தனனுடைய பெயரைச் சுருக்கி ஏ.கே. சுந்தரம் என்று அழைத்துக் கொண்டிருக்கிறார். கொஞ்ச காலம் இந்தி கூடப் படித்திருக்கிறார்.
அவரை 'ஜி' போட்டு வட இந்தியரை அழைப்பது போலக்கூட அழைத்திருக்கிறார்கள். 'கவியின் கனவு' என்ற நாடகத்தில் எம்.என்.நம்பியார் நடித்துப் புகழ் பெற்ற ராஜகுரு வேடத்தில்கூட நடித்திருக்கிறார். பட்டுக்கோட்டை நாடகத்திற்கு எழுதிய பாடலகள் இன்றும் சில கிடைக்காமல் கூட இருந்திருக்கலாம்.
பொதுவுடைமை இயக்கக் கவிஞராகப் பட்டுக்கோட்டை சரியாகவே அங்கீகரிக்கப்பட்டாலும், ஆரம்பகாலத்தில் திராவிட இயக்கத்தோடு அவருக்கு தொடர்பு இருந்திருக்கிறது. திராவிட இயக்க பட்டுக்கோட்டை அழகிரி, டேவிட் ஆகியோரிடம் இவருக்குத் தொடர்பு இருந்திருக்கிறது. 'வாழ்க பாரதிதாசன்' என்று தலைப்பில் எழுதிவிட்டுப் பாடல்களை எழுதும் வழக்கத்தைப் பின்பற்றியது அவருடைய திராவிட இயக்கத்ட் தொடர்பையும் காட்டுகிறது. பாரதிதாசனைச் சந்திக்கவே அவர் பட்டுக்கோட்டை அழகிரியிடம் கடிதம் வாங்கி வந்தார் என்பதும் கவனிக்க தக்கது.
கலைஞர் கருணாநிதி தன்னுடைய கட்டுரை ஒன்றில் (1995 பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் சிலை திறப்பு விழாச் சிறப்பு மலர்) திராவிடர் கழக மேடைகளில் பட்டுக்கோட்டையார் பாடல்கள் பாடியதைப் பற்றிக்குறிப்பிட்டிருக்கிறார். அவரோடு பழகிய இன்னும் சிலரும் இந்தக் கால கட்டத்தை நினைவு கூர்ந்திருகிறார்கள். எனினும் அவரைப் பொதுவுடைமை இயக்கமே வென்றது. ஆனால் பொதுவுடைமை இயக்கத்தில் அவர் உறுப்பினராகி, ஸ்தாபன ரீதியாகச் செயல்பட்டதாகத் தெரியவில்லை.
பட்டுக்கோட்டை கவிஞராக அறிமுகமாகி, அங்கீகாரம் பெற்றுப் பின்னர் திரை உலகில் பாடலாசிரியராக வளர்ந்தவரல்ல. நேரடியாகவே பாடலாசிரியராக வளர்ந்தவரல்ல. நேரடியாகவே பாடலாசிரியராகத் திரை உலகில் அடி எடுத்து வைத்தார். திரைப் பாடல்கள் அல்லாது பட்டுக்கோட்டை எழுதிய பாடல்கள் மிகக் குறைவுதான். பட்டுக்கோட்டை திரை உலகில் தன் சுவடுகளைப் பதிப்பிககத் தொடங்கிய காலம், திரை உலகில் பல மாற்றங்கள் நிகழ்ந்துகொண்டிருந்த காலம். புராணப்படங்களின் ஆதிக்கம் குறைந்து, சமூகப் படங்கள் முதன்மை பெறத் தொடங்கிய வேளை. தேசிய, திராவிட பொது உடைமை இயக்கங்களின் வீச்சு திரை உலகிலும் அப்போது தென்படத் தொடங்கியிருந்தது. நல்ல தமிழும், கருத்துள்ள பாடல்களும் வரவேற்பைப் பெறத் தொடங்கிய சூழல். வசனம் முதன்மை பெற்ற ஒரு போக்கு. இந்த நிலையில் தான் பட்டுக்கோட்டை திரை உலகில் நிலைபெறத் தொடங்கினார்.
பட்டுக்கோட்டை வளர்ந்து வந்த காலகட்டத்தில் பொதுவுடைமை இயக்கத்திற்கும் திராவிட இயக்கத்திற்கும் நல்ல நட்பு இருந்தது. அந்தக் காலத்தில் கவிஞனாக விரும்பிய யாரும் பாரதிதாசனைப் ' பீடத்த்டில் ' நிறுத்தி வணங்குவது ஒரு மரபாக இருந்தது. மேலும் தமிழ் உணர்வு புதுவெள்ளமாய்ப் பெருக்கெடுத்த ஆண்டுகள் அவை. இந்தப்போக்கு எந்தக் கவிஞனையும் பாரதிதாசனிடம் நெருங்க வைக்கும். பாரதிதாசனைப் பார்க்க வேண்டும், அவரோடு இருக்க வேண்டும் என்ற ஆசை அன்று ஒரு இயல்பான ஆசையே.
அதனால் தான் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் சுயமரியாதை இயக்கத் தலைவர் பட்டுக்கோட்டை அழகிரியிடமிருந்து ஒரு அறிமுகக் கடிதம் பெற்றுக் கொண்டு, புதுவைக்குச் சென்று பொதுவுடைமைக் கட்சித் தலைவர் வ.சுப்பையா மூலம் பாரதிதாசனிடம் உதவியாளராகச் சேர்ந்திருக்கிறார். பாடல் எழுதத் தொடங்கும்போதெல்லாம் 'வாழ்க பாரதிதாசன்!' என்று தலைப்பில் எழுதிவிட்டுப் பாடல் எழுதுவதை ஒரு வழக்கமாகக் கொண்டிருக்கிறார் கவிஞர். அது மட்டுமல்ல 11.09.1957 இல் நடைபெற்ற பட்டுக்கோட்டையாரின் திருமணமே பாரதிதாசன் தலைமையில்தான் நடந்திருக்கிறது. பொதுவுடைம இயக்கத்தின் சார்பில் திரு.கே.முத்தையா கலந்து கொண்டிருக்கிறார்.
பட்டுக்கோட்டையாருக்கு அமரர் ஜீவாவுடன் மிக நெருங்கிய பழக்கம் இருந்திருக்கிறது. ஜீவாதான் முதன் முதலில் ஒரு நாடகத்திற்குப் பாடல் எழுதும் வாய்ப்பைப் பட்டுக்கோட்டையாருக்குத் தேடித்தந்திருக்கிறார். 'கண்ணின் மணிகள்' நாடகம் சென்னையில் தயாரானபோது, பட்டுக்கோட்டைக்கு அந்த வாய்ப்புக் கிடைத்தது. அந்த நாடகம் திண்டுக்கல்லில் 1954இல் விவசாய சங்க மாநாட்டில் நடத்தப்பட்டது. 'தேனாறு பாயுது, செங்கதிரும் சாயுது, ஆனாலும் மக்கள் வயிறு காயுது' எனற் புகழ் பெற்ற திரைப்பாடல் முதலில் விவசாய சங்க மாநாட்டில் நடந்த நாடகத்தில் அரங்கேறியது. பொதுவுடைமை இயக்கத்தில் தன்னைப் பிணைத்துக் கொண்டு நின்ற அந்நாளைய நடிகர் டி.கே.பாலச்சந்திரன் தான் பட்டுக்கோட்டை திரை உலகில் நுழைவதற்கு உறுதுணையக இருந்திருக்கிறார். பட்டுக்கோட்டை முதலில் பாடல் எழுதிய திரைப்படம் 'படித்த பெண்' என்று சொல்லப்படுகிறது. ஆனால் 1956இல் இந்தப்படம் வெளிவருவதற்கு முன்பே இன்னொரு படமான 'மகேஸ்வரி' 1955இல் வெளிவந்த்து. பட்டுக்கோட்டை முதலில் பாடல் எழுதி முதன் முதலாக வெளிவந்த படம் என்ற் பெருமையை 'மகேஸ்வரி' பெற்றாள் என்று ஜீவபாரதி குறிப்பிட்டுள்ளார். மேலும் 1954ஆம் ஆண்டு ஜனசக்தி நவம்பர் புரட்சி மலரில் வெளிவந்த 'புதிய ஒளிவீசுது பார்' என்ற கவிதைதான் அச்சில் ஏறிய பட்டுக்கோட்டையின் முதல் கவிதை என்றும் குறிப்பிட்டுள்ளார். அதைப் போல 15.08.1959 ஜனசக்தி இதலில் வெளிவந்த 'புது ஞாயிறு' என்ற கவிதைதான் பட்டுக்கோட்டையின் கடைசிக் கவிதை என்றும் தெரியவருகிறது. கடைசிப் பாடலை பெற்ற படம் ' மகாலட்சுமி.'
ஆக ஒரு பத்தாண்டு காலம் கூட ஒர் பாடலாசிரியனாக இருப்பதற்கு வாய்ப்பு இல்லாமல் போன, முப்பதாவது வயதைக்கூட எட்டி பிடக்க முடியாமல் போன பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம், பாரதி, பாரதிதாசன் மரபில் அவர்களுக்கு அடுத்த இடத்தை பிடித்தது அவருடைய மகத்தான் சாதனை என்று சொல்ல வேண்டும். இந்த முன்னோட்டத்தோடு பட்டுக்கோட்டையின் பாட்டுக் கோட்டைக்குப் போவோம்.
(தொடரும்)
அன்புடன்
அரசு